கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் அருகே முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான மருதமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருக்கும் காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி டிக்கெட் விற்பனை எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலாளி, ஓட்டுநர், விடுதி மேற்பார்வையாளர், மினி பஸ் கிளீனர், உதவி எலக்ட்ரீசியன், பிளம்பர், பம்ப் ஆப்ரேட்டர் ஆகிய காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்நிலையில் டிக்கெட் விற்பனை எழுத்தர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். அலுவலக உதவியாளர் வேலைக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாட்ச்மேன், விடுதி மேற்பார்வையாளர் ஆகிய வேலைக்கு தமிழில் கண்டிப்பாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் வேலைக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இலக ரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வருட ஓட்டுனர் அனுபவம் இருக்க வேண்டும்.
பிளம்பர், பம்ப் ஆப்ரேட்டர் வேலைக்கு அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படும் பிளம்பர் ட்ரேடில் ஐடிஐ சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் ஐந்து வருட அனுபவம் அல்லது இரண்டு வருட அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். உதவி எலக்ட்ரீசியன் வேலைக்கு எலக்ட்ரிக்கல் அல்லது வயர் மேன் துறையில் ஐடிஐ சான்றிதழ் பெற்று எலக்ட்ரிக்கல் லைசன்ஸ் போர்டில் இருந்து ‘எச்’ சான்றிதழ் கண்டிப்பாக வாங்கி இருக்க வேண்டும்.
மேற்கூறிய பணிகளுக்கு 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், மருதமலை, பேரூர் வட்டம், கோவை-641046 என்ற முகவரிக்கு வருகிற 05.04.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.