கர்நாடக மாநிலம், சிவமொக்கா சோகேன் மத்திய சிறையில் நடத்தப்பட்ட சோதனையில், மொத்தம் 293 கிராம் கஞ்சா மற்றும் 40 சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஒரு சிறை ஊழியர் என இருவர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இன்று காலை, சிறைச்சாலை உணவகத்திற்காக வாழைப்பழங்கள் ஆர்டர் செய்யப்பட்டதாகக் கூறி, ஒரு ஆட்டோ ஓட்டுநர் வாழை பழ பைகளை பிரதான வாயிலில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். சிறைக் காவலர்கள் அந்தப் பைகளைச் சோதனையிட்ட போது, அதில் 123 கிராம் கஞ்சா மற்றும் 40 சிகரெட்டுகள் கருப்பு நாடாவில் சுற்றப்பட்டு வாழை இலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, சிறை சாலையின் மற்றொரு சோதனையில், எஸ்.டி.ஏ. ஊழியர் சாத்விக் (25) என்பவர் தனது உள்ளாடைகளில் மறைத்து 170 கிராம் கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம், சிறை ஊழியர்களே கைதிகளுக்குக் கஞ்சா வழங்கியதும் உறுதியாகியுள்ளது.
சந்திரகிரி காவல் நிலையத்தில், சிறைச்சாலையின் தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் ரங்கநாத் இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளார். வாழைப்பழங்கள் மூலம் கஞ்சா கொண்டு வர உதவியவர்கள் குறித்தும், சாத்விக்குக்கு வேறு யாருடனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
