திரைப்பட இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் குடும்பத்தில் ஏற்பட்ட மீள முடியாத துயரங்களில் ஒன்று அவரது மகள் மீராவின் திடீர் மறைவு. பள்ளி மாணவியாக இருந்த மீராவின் அகால மரணம் அந்த குடும்பத்தையே நிலைகுலையச் செய்தது. காலங்கள் நகர்ந்தாலும் மகளின் இழப்பு ஏற்படுத்திய ஆழமான வடுவிலிருந்து அவரது பெற்றோர் இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த தனது மகள் மீராவை நினைவுகூர்ந்து விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா தனது சமூக வலைதளப் பக்கத்தில் மனதை உருக்கும் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், மகளின் நினைவுகள் தினமும் இதயத்தை வாட்டுவதாகவும், கண்ணீர் இன்னும் ஓயவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். நாட்கள் நகர்ந்தாலும் ஒவ்வொரு நாளும் பல வருடங்களைப் போல பாரமாக கழிவதாகவும், மீரா இல்லாத வாழ்க்கை இனி ஒருபோதும் பழைய நிலைக்குத் திரும்பப் போவதில்லை என்றும் தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், தாயை விட்டுப் பிரிந்து செல்லும் முடிவை எடுப்பதற்குப் பதிலாக, இருவரும் இணைந்தே எந்தப் பிரச்சனையையும் எதிர்த்துப் போராடியிருக்கலாம் என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். மற்றவர்கள் வாழ்க்கையைத் தொடரச் சொன்னாலும் தன் உடலிலும் உயிரிலும் கலந்த மகளை மறப்பது இயலாத ஒன்று எனக் கூறியுள்ள அவர், தன் கடைசி மூச்சு உள்ளவரை மகளின் நினைவுகள் தொடரும் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
