சென்னை செங்குன்றம் பகுதியை அடுத்த பாடியநல்லூரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ரத்தினவேல் பாண்டியன். இவர் புழல் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் தங்கை பூர்ணிமாவைக் காதலித்துத் திருமணம் செய்து, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்தச் சூழ்நிலையில், சரவணனின் மனைவி சரண்யாவுக்கும் ரத்தினவேல் பாண்டியனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை சரவணன் பலமுறை கண்டித்தும் அவர்கள் கேட்காததால், சரவணனுக்கும் ரத்தினவேல் பாண்டியனுக்கும் இடையே நீண்ட காலமாகவே கடும் முன்விரோதம் நிலவி வந்துள்ளது.
தன்னுடைய தங்கை மற்றும் மனைவியின் வாழ்க்கையில் தலையிட்ட ரத்தினவேல் பாண்டியன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த சரவணன், அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காகத் தனது சித்தப்பாவான பழனிசாமியுடன் இணைந்து திட்டம் தீட்டியுள்ளார். ரத்தினவேல் பாண்டியன் எங்கு செல்கிறார் என்பதைத் தொடர்ந்து ரகசியமாகக் கண்காணித்து வந்த சரவணன், அவர் ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று அலமாதி சாலையில் தனியாக பைக்கில் செல்வதைக் கவனித்துள்ளார். உடனடியாக அவரைப் பின்தொடர்ந்து சென்ற சரவணன் மற்றும் அவரது கூட்டாளிகள், ரத்தினவேல் பாண்டியனைப் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர்.
நடுரோட்டில் நடந்த இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த செங்குன்றம் காவல்துறையினர், விரைந்து வந்து உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், குடும்பப் பகை காரணமாகவே இக்கொலை அரங்கேறியது உறுதியானது. இந்தச் சம்பவம் தொடர்பாக சரவணன், அவனது சித்தப்பா பழனிசாமி மற்றும் இதற்கு உதவிய சரவணனின் தம்பி தனசேகர் ஆகியோரைப் பிடித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், குற்றவாளிகள் பயன்படுத்திய கத்திகள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
