கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக் காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு பாரதிராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்து, பலமுறை எச்சரித்தும் கண்ணன் அதற்குக் கட்டுப்படவில்லை. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்த நிலையில், கண்ணனைத் தீர்த்துக்கட்ட பாரதிராஜா முடிவு செய்தார். இதற்காகத் தனது நண்பர்களான வசந்தகுமார் மற்றும் மணிகண்டன் ஆகியோரின் உதவியுடன், கடந்த ஜூன் 11-ஆம் தேதி கண்ணனை நியூ அம்மன் நகர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டிற்குத் தனியாக வரவழைத்துள்ளார்.
அங்கு ஏற்கனவே பாரதிராஜா மற்றும் அவரது நண்பர்களான ருத்தீஷ், நசீர் உசேன் ஆகியோர் கூடியிருந்தனர். அவர்கள் கண்ணனிடம் காதலைக் கைவிடுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கண்ணன் அதற்கு மறுக்கவே, ஆத்திரமடைந்த கும்பல் அவரைச் சரமாரியாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் கொலையை மறைப்பதற்காக, கண்ணனின் உடலை அருகில் இருந்த ஒரு தோட்டக் கிணற்றில் வீசிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். இதற்கிடையில், ஜூன் 13-ஆம் தேதி மேட்டுப்பாளையம் அருகே உள்ள தனியார் தோட்டக் கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்த கண்ணனின் சடலத்தைப் போலீசார் மீட்டனர்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கண்ணன் கடைசியாக வசந்தகுமார் மற்றும் மணிகண்டனுடன் சென்றது தெரியவந்தது. அதனடிப்படையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில், நண்பனின் தங்கையைக் காதலித்த முன்விரோதத்தால் கண்ணன் அடித்துக் கொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முதன்மைக் குற்றவாளியான பாரதிராஜா, ருத்தீஷ், வசந்தகுமார் மற்றும் நசீர் உசேன் ஆகிய நான்கு பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தற்போது தலைமறைவாக உள்ள மணிகண்டனைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
