பட்டியல் இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள இப்படியா?… பதவியை உதறித் தள்ளிய தேர்தல் ஒருங்கிணைப்பாளர் மாணிக்கம் தாகூர்… காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு…!!!

By Muthu Mani on சித்திரை 1, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியில் மட்டும் இழுபறி நீடிப்பதால் இதுவரை முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கூட வெளியிடப்படவில்லை. வேட்பாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்கள் கட்சித் தலைமையிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், முக்கியப் பொறுப்பில் இருந்த மாணிக்கம் தாகூர் விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் முக்கிய நிர்வாகியின் ராஜினாமா ஆகியவை அக்கட்சியின் தேர்தல் பணிகளில் தொய்வை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.