கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர் சமீபத்தில் காலமானார். அவரது மறைவிற்குப் பிறகு, பள்ளிவாசல் நிர்வாகிகள் அவரது வீட்டைச் சுத்தம் செய்யச் சென்றபோது அங்கு இருந்த காட்சியைப் பார்த்து உறைந்துபோயினர். வீடு முழுவதும் மூட்டை மூட்டையாகப் பணத் தாள்கள் குவிந்து கிடந்தன. அப்பணத்தை எண்ணிப் பார்த்தபோது அதன் மதிப்பு ரூ.1 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத அந்த மூதாட்டியின் சகோதரர்களைத் தொடர்புகொண்டு பேசியபோது, “இந்தச் சேமிப்புப் பணம் எங்களுக்கு வேண்டாம், இதை அந்த மசூதிக்கே தானமாக வழங்கிவிடுங்கள்” எனக் கூறிவிட்டனர். வாழ்நாள் முழுவதும் ஏழ்மையில் பிச்சை எடுத்து வாழ்ந்த மூதாட்டி ஒருவர், கோடிக்கணக்கில் பணத்தைச் சேமித்து வைத்து விட்டு மறைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
