கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம், கும்படாஜே கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட உப்ரன்கலா பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ண பட் (வயது 70). இவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அண்ணனின் திடீர் மரணத்தைக் கண்டு அவரது தம்பி கேசவ பட் அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.
அண்ணனின் உடலைப் பார்த்து கதறி அழுதுகொண்டிருந்த கேசவ பட்டுக்கு, இரவு 10 மணி அளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு வீட்டிலேயே மயங்கி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இருப்பினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கேசவ பட்டும் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார். அண்ணன் இறந்த அதிர்ச்சியில், அடுத்த 3 மணி நேர இடைவெளியில் தம்பியும் மாரடைப்பால் மரணமடைந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் உறவினர்களிடையேயும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
