தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி 25 எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த அதிரடி திருப்பத்தால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அதிர்ச்சியடைந்ததுடன், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் கட்சிப் பொறுப்புகளை உடனடியாகப் பறித்தது. ஆனால், இந்த நடவடிக்கையை ஏற்க மறுத்துள்ள சி.வி.சண்முகம் தரப்பினர், “உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான்” என்ற நிலைப்பாட்டுடன், சட்டப்பேரவையில் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் இருப்பதாகக் கூறி தங்களை அங்கீகரிக்குமாறு சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.
இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலிருந்து பிரிந்து சென்ற சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களுக்குப் புதிய தவெக அமைச்சரவையில் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. இந்த விவகாரம் தற்போது பெரும் சட்ட ரீதியான விவாதமாக மாறியுள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை எம்.பி, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் புகாருக்கு உள்ளான ஒருவரைத் தகுதி நீக்கம் செய்யச் சபாநாயகருக்கு அதிகாரம் இருப்பதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர், புகாருக்கு உள்ளான எம்.எல்.ஏ. ஒருவரை அமைச்சராகப் பதவியேற்க வைப்பதற்கு முன், அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் முதலமைச்சரிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை விசாரணை நிலுவையில் இருக்கும் போதே அவர்கள் அமைச்சர்களாகப் பதவி வகித்தால், கடந்த 2020-ஆம் ஆண்டு மணிப்பூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சர் தவுனோஜம் ஷியாம்குமாரை பதவிநீக்கம் செய்த தீர்ப்பைப் போல, இங்கேயும் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும் என்று இன்பதுரை எச்சரித்துள்ளார். இது சி.வி.சண்முகம் அணிக்கு எடப்பாடி தரப்பு விடுத்துள்ள நேரடி அரசியல் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
மறுபுறம், சண்முகம் தரப்பினர் தங்களிடம் தான் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், தற்போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எடுக்கப் போகும் முடிவே இரு அணிகளின் அரசியல் தலையெழுத்தையும் தீர்மானிக்கப் போகிறது. ஒருபுறம் எடப்பாடி தரப்பின் தகுதி நீக்கக் கோரிக்கை, மறுபுறம் சண்முகம் தரப்பிற்குத் தவெக அமைச்சரவையில் சேரக் கிடைக்கும் வாய்ப்பு, இன்னொரு புறம் அ.தி.மு.க.வின் தலைமை உரிமைப் போர் எனத் தமிழக அரசியல் களம் பரபரப்பின் உச்சத்தை எட்டியுள்ளது. சபாநாயகரின் இறுதி முடிவு வெளியாகும் வரை இந்த அரசியல் சஸ்பென்ஸ் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
