விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.என்.ரவியை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது அரசியல் பயணம் மற்றும் கடந்த கால ஆட்சி சாதனைகள் குறித்து விரிவாகப் பேசினார். அப்போது, “அதிமுக என்பது உண்மையான ஜனநாயகம் நிலவும் கட்சி; இங்கு ஒரு சாதாரண கிளைச் செயலாளர் கூட பொதுச்செயலாளர் ஆக முடியும் என்பதற்கு நானே சாட்சி” என்று குறிப்பிட்ட அவர், ஜெயலலிதா கணித்தபடி தனக்குப் பின்னாலும் அதிமுக நூறாண்டுகள் நிலைத்து நிற்கும் என உறுதிபடத் தெரிவித்தார்.
கடந்த கால அதிமுக ஆட்சியின் சாதனைகளை வரிசைப்படுத்திய இபிஎஸ், வர்தா புயல் பாதிப்பின் போது போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மின்சாரம் மற்றும் போக்குவரத்தைச் சீர் செய்ததையும், சென்னையில் கடும் வறட்சி நிலவிய போது ரயில்கள் மூலம் குடிநீர் கொண்டு வந்து மக்களின் தாகத்தைத் தீர்த்ததையும் சுட்டிக்காட்டினார். “திமுக ஆட்சியில் அதிமுக எதையும் செய்யவில்லை” என்று முதல்வர் ஸ்டாலின் கூறுவது தவறு என்றும், மக்கள் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியது அதிமுக அரசுதான் என்றும் அவர் வாதிட்டார்.
மேலும், உதயநிதி ஸ்டாலினின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தான் சசிகலா காலில் விழுந்தது குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்தார். “உதவி செய்தவர்களிடம் ஆசி வாங்குவது எனது பண்பு மற்றும் அதிமுகவின் கலாச்சாரம். அந்தப் பண்பின் அடிப்படையில்தான் சசிகலா காலில் விழுந்து வணங்கினேன்” என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். ஒரு சாதாரண தொண்டனாக இருந்து உயர்ந்து வந்த தனக்கு, பண்பும் நன்றியுணர்வும் முக்கியம் என்பதைத் தனது பேச்சின் மூலம் அவர் வலியுறுத்தினார்.
