தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதில் ‘குலவிளக்கு’ திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், அரசுப் பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவச பயண வசதி விரிவுபடுத்தப்படும் என்றும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். திமுகவின் தற்போதைய திட்டங்களையே அதிமுக விரிவுபடுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தாலும், குடும்பத் தலைவிகளுக்கான நிதியுதவியை இரட்டிப்பாக்குவது வாக்காளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ள நிலையில், இவ்வளவு பெரிய நிதித் தேவையை எப்படிப் பூர்த்தி செய்ய முடியும் என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். முறையான நிர்வாகத் திறமை இருந்தால் நிதி நெருக்கடியைச் சமாளித்து மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்றும், தற்போதைய திமுக அரசுக்கு அந்தத் திறமை இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். நிதிப் பற்றாக்குறையை ஒரு காரணமாகக் காட்டி நலத்திட்டங்களைத் தவிர்க்கத் தேவையில்லை என்பதே அதிமுகவின் நிலைப்பாடாக உள்ளது.
