சிவி சண்முகம், வேலுமணிக்கு செக்?… மகன் மிதுனுக்கு மெகா பொறுப்பு…. எடப்பாடியின் திடீர் மூவ்…. அதிர்ச்சியில் அதிமுக மூத்த தலைவர்கள்….!

By Nanthini on ஆடி 14, 2026

Spread the love

நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த படுதோல்வி, அக்கட்சியைப் பெரும் அரசியல் நெருக்கடியில் தள்ளியுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்து எதிர்க்கட்சியாக மாறிய அதிமுக, தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால், கட்சியை மீட்கும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி, இளைஞரணி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அவர் தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டங்களின் பின்னணியில் தனது மகன் மிதுனை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான காய்நகர்த்தல்களை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வருகிறார் என்ற தகவல் தற்போது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், மூத்த தலைவர் கே.பி.முனுசாமி மூலமாக இதற்கான அஸ்திவாரம் போடப்பட்டது. “கட்சியில் இளைஞர்களுக்கும் புது முகங்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும்; எடப்பாடியின் மகன் மிதுன் கட்சிக்குள் வருவதற்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது” என்று முனுசாமி பேசியது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. வாரிசு அரசியலை எதிர்த்து உருவான அதிமுகவில், இதுவரை எந்தவொரு அடிப்படைப் பொறுப்பிலும் இல்லாத மிதுனுக்கு முக்கியத்துவம் தருவதா என்று அடிமட்ட தொண்டர்கள் கொந்தளித்தனர். அப்போது எழுந்த எதிர்ப்பை அடக்க, “எனது மகன் எப்போதும் கட்சிப் பதவிக்கு வர மாட்டார்” என்று எடப்பாடி பழனிச்சாமி முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது மீண்டும் அந்த எண்ணம் விஸ்வரூபம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

   

குறிப்பாக, அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவை (IT Wing) கைப்பற்றி, அதன் மூலம் மிதுனை முன்னிலைப்படுத்த எடப்பாடி திட்டமிட்டு வருவதாகப் பேச்சு எழுந்துள்ளது. அண்மையில் நடந்த தேர்தலில் ஐடி விங் சரியாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை எடப்பாடி முன்வைத்ததும், இதனால் ராஜ் சத்யன் உள்ளிட்ட ஐடி விங் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதும் இதை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளது. தற்போது நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டங்களில், “கட்சியில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கலாமா? அவர்களைப் பெரிய பதவிகளில் அமர்த்தலாமா?” என்று எடப்பாடி பழனிச்சாமி அடிக்கடி கேள்வி எழுப்பி வருவது, அவரது மகன் மிதுனை ஐடி விங் செயலாளராக்குவதற்கான முன்னோட்டமே என்று அக்கட்சியினர் வெளிப்படையாகவே பேசத் தொடங்கியுள்ளனர்.

   

தற்போது அதிமுகவில் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன் போன்ற மூத்த தலைவர்கள் கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி, கூட்டங்களைப் புறக்கணித்து வருகின்றனர். இந்த உட்கட்சிப் பிளவையும், தலைவர்களின் இடைவெளியையும் சாதகமாக்கிக் கொண்டு, மிதுனை கட்சிக்குள் கொண்டு வந்தால் பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது என்று எடப்பாடி பழனிச்சாமி கணக்கு போடுகிறார். வரும் நாட்களில் அதிமுகவின் முக்கியப் பொதுக்கூட்டங்கள் மற்றும் கட்சி நிகழ்வுகளில் மிதுனை மேடயேற்றி, அவருக்கு அதிகாரப்பூர்வமாகப் பதவி வழங்க எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக அறிவாலய வட்டாரங்களும், அதிமுக உடன்பிறப்புகளும் கிசுகிசுக்கின்றனர்.