தமிழகத்தில் திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த அரசியல் பாரம்பரியத்தை உடைத்து, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) ஆட்சியைப் பிடித்து அசத்தியுள்ளது. இத்தேர்தலில் திமுக இரண்டாவது இடத்தையும், அதிமுக மூன்றாவது இடத்தையும் பிடித்தன. இந்தத் தோல்வியால் அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தவெகவில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாற்று அரசியல் கட்சியினரை இணைக்கும் விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நேற்று காலை சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் ஏராளமான மாற்றுக்கட்சியினர் இணைவதற்காக 2 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தனர். மதியம் 12 மணியளவில் அவர்கள் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டபோது, முட்டி மோதிக்கொண்டு உள்ளே சென்றனர். தொடர்ந்து, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் முக்கியப் பிரமுகர்கள் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.
அதிமுகவின் முக்கியப் பிரமுகர்களான மூன்று முறை வலங்கைமான் தொகுதி எம்எல்ஏவாகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த கோமதி சீனிவாசன் தவெகவில் இணைந்தார். இவர்களுடன் அதிமுக கலைப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.வி. உதயகுமார், முன்னாள் எம்எல்ஏக்கள் சுப்பிரமணியன் (திருவையாறு), சாந்தி ராமு (குன்னூர்), மதுரை அதிமுக எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணைச் செயலாளர் எம்.எஸ். பாண்டியன் ஆகியோர் தவெகவில் இணைந்தனர். மேலும், திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான், நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் கம்பம் எம்எல்ஏ ஜெகன்நாத் மிஸ்ரா மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சகோதரி மகளும் தொழிலதிபருமான மேனகா ஆகியோரும் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.
