அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் திமுக அரசின் மீதும், முதலமைச்சர் ஸ்டாலின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் திமுக அங்கம் வகித்த மத்திய அரசுதான் என்று சுட்டிக்காட்டிய அவர், இப்போது அவர்களே அதை எதிர்ப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று சாடினார். மேலும், தமிழகத்தில் பெருகி வரும் போதைப்பொருள் புழக்கம் மற்றும் விலைவாசி உயர்வு குறித்து கவலை தெரிவித்த அவர், திமுக ஆட்சியில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இதில் சிறுமிகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் சமூக நலத்துறை அமைச்சரின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி குற்றம் சாட்டினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து தான் பேசியதற்கு விளக்கம் அளித்த எடப்பாடி பழனிசாமி, “கொரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டபோது அவர் எங்கே காணாமல் போனார் என்றுதான் கேட்டேனே தவிர, போய் சேர்ந்திருப்பார் என தவறாகப் பேசவில்லை” என்று குறிப்பிட்டார். தான் முதலமைச்சராக இருந்தபோது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் 32 மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று களப்பணியாற்றியதாகத் தெரிவித்த அவர், தன்னை அவதூறாகப் பேசினால் தகுந்த பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டேன் என்றும் எச்சரித்தார். தன்னை ஒரு வார்த்தை இழிவாகப் பேசினால், பத்து வார்த்தைகளால் பதிலடி கொடுக்க முடியும் என்றும், எத்தகைய ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பதை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள் என்றும் அவர் ஆவேசமாகப் பேசினார்.
