அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், தற்போதைய தவெக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குறிப்பிட்டு, மதுரை கீழ மாத்தூரில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் மற்றும் தாம்பரம் அருகே கல்லூரி மாணவியிடம் தவறான முறையில் நடந்துகொண்ட விவகாரம் ஆகியவற்றில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது, திருவொற்றியூரில் மின் துறை உதவி பொறியாளரை ஆளுங்கட்சியினர் நள்ளிரவில் மிரட்டியது போன்ற சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அராஜகப் போக்கு தொடர்வதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மழைக்கால பாதிப்புகள் மற்றும் அரசின் அலட்சியம் குறித்தும் எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் சாடியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பெய்த மழையினால் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காததே, இன்று காலை அதனை கடக்க முயன்ற கணவன், மனைவி இருவரும் மூழ்கி உயிரிழக்கக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். “சிறப்பான ஆட்சியைத் தருவேன், மாற்றம் கொண்டு வருவேன்” என்று வசனம் பேசும் முதலமைச்சரின் இந்த ‘பொய்க்கால் குதிரை’ ஆட்சியில், ஒவ்வொரு நாளும் விலைமதிப்பற்ற உயிர்களை மக்கள் இழந்து ஏமாற்றமே மிஞ்சுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இறுதியாக, தமிழக அரசின் விளம்பர அரசியலை சாடியுள்ள அவர், முந்தைய ஆட்சியில் திமுக ‘ட்விட்டர் மடைமாற்று அரசியல்’ செய்தது என்றால், இன்றைய ஆளுங்கட்சி ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மடைமாற்று அரசியல்’ செய்வதாக விமர்சித்துள்ளார். முதலமைச்சர் கோட்டைக்கு வருவதும், மதிய உணவு சாப்பிடுவதுமாக ஒரு தனி மாய உலகத்தைக் கட்டமைக்கும் வேலையில் ஈடுபடுகிறாரே தவிர, தமிழ்நாடு ரத்தக்காடாக மாறி வருவது பற்றியோ, தன் கட்சியினரின் அதிகார வெறியாட்டம் பற்றியோ ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை என்று சாடியுள்ளார். எனவே, வாக்களித்த தமிழக மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால், அவர்களைக் காப்பாற்ற சட்டம்-ஒழுங்கைச் சீர்செய்யும் நடவடிக்கைகளை முதலமைச்சர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
