“5 கட்சி தாவிய செந்தில் பாலாஜி… மாவட்டத்தை விட்டே ஓடிட்டாரு”… திமுகவின் ‘உள்ளடி’ அரசியலை அம்பலப்படுத்திய எடப்பாடி பழனிசாமி…!

By Nanthini on சித்திரை 20, 2026

Spread the love

கரூரில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்துப் பேசிய அவர், கரூர் மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டை என்றும், இந்தத் தேர்தலில் திமுகவின் “பணநாயகத்தை” வீழ்த்தி அதிமுகவின் “ஜனநாயகம்” வெற்றி பெறும் என்றும் சூளுரைத்தார். மேலும், அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடுவதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை இலக்கு வைத்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, அவர் தற்போது ஊரை விட்டு மட்டுமல்லாமல் மாவட்டத்தை விட்டே ஓடிவிட்டதாகச் சாடினார். ஐந்து கட்சிகளுக்குத் தாவி வந்த ஒருவருக்கு திமுகவில் முக்கிய இலாகாக்கள் வழங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், திமுகவில் பல ஆண்டுகளாக உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை கிடையாது என்பதற்கு இதுவே சாட்சி என்றார். போக்குவரத்து, மின்சாரம் என எந்தத் துறை கொடுத்தாலும் அதில் ஊழல் செய்வதே அவரது வேலை என்றும், 441 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு வந்தவரால் யாரையும் காப்பாற்ற முடியாது என்றும் கடுமையாகச் சாடினார்.

   

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று வருத்தம் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படுவதாகவும், போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரங்களை முன்வைத்துப் பேசினார். மேலும், மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை இந்தியா கூட்டணி கட்சிகள் நிராகரித்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், திமுக தலைமையிலான கூட்டணி என்பது வெறும் தேர்தலுக்காக அமைக்கப்பட்டதே தவிர, அதில் உண்மையான வலிமை இல்லை என்றும் விமர்சித்தார்.

   

இறுதியாக கரூர் மாவட்டத்தின் உள்ளூர் பிரச்சனைகள் குறித்துப் பேசிய அவர், இனாம் நிலங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் விவசாயிகளுக்கும் குடியிருப்பு வாசிகளுக்கும் அதிமுக ஆட்சி அமைந்ததும் நிரந்தரத் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். கடந்த தேர்தலில் போலி கொலுசு மற்றும் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றும் அதிமுகவின் வெற்றி உறுதி என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.