கோவில் திருவிழாவிற்குச் சென்ற ஆறுமுகம்… பிணமாகத் திரும்பிய அவலம்… EPS பிரசாரப் பயணத்தில் நிகழ்ந்த துயரம்…!

By Nanthini on சித்திரை 2, 2026

Spread the love

சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு அடுத்த கட்டமாக புதுக்கோட்டைக்குச் சென்று கொண்டிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகன வரிசையில் இருந்த ஒரு கார் மோதியதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாநிலம் தழுவிய சூறாவளிப் பயணத்தை மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி, சிவகங்கையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் திறந்த வாகனத்தில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

பரப்புரையின் போது திமுக அரசின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியை விமர்சித்தும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை விளக்கியும் உரையாற்றிய அவர், பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு சிவகங்கையிலிருந்து புதுக்கோட்டை நோக்கிப் புறப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமியின் பிரசார வாகனத்தைத் தொடர்ந்து வந்த பாதுகாப்பு வாகனங்கள் மதகுபட்டி அருகே அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தின் மீது ஒரு வாகனம் பலமாக மோதியது.

   

இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில், உயிரிழந்தவர் மதகுபட்டி பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞரான ஆறுமுகம் என்பது தெரியவந்துள்ளது. அவர் தனது இருசக்கர வாகனத்தில் ஊர் திருவிழாவைப் பார்ப்பதற்காகச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ஆறுமுகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முக்கியத் தலைவர்களின் பாதுகாப்பு வாகனங்கள் மோதி இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும் சோகத்தையும் உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருபுறம் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி வரும் வேளையில், திருவிழாவிற்குச் சென்ற இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவரது குடும்பத்தினரிடையே ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது.