கூட்டுறவு வங்கிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய கடன்களில் அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை மட்டுமே முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், பெரிய விவசாயிகளுக்கு வெறும் 5,000 ரூபாய் மட்டுமே நிவாரணமாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்புக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைத் தடுக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கும் இந்த அரசு, தனது கேவலமான குதிரை பேர அரசியலைத் திசைதிருப்பவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் ஒரு விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது என்று அவர் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில், “எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக இந்த அரசு செயல்படுவதாகச் சாடியுள்ளார். தேர்தல் அறிக்கையில் “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்” என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது நிலத்தை அளவுகோலாக எடுக்காமல் பணத்தை அளவுகோலாக வைத்து மிகப்பெரிய தில்லுமுல்லுவில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். 2021-ஆம் ஆண்டில் தனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்து 16.43 லட்சம் விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், தற்போதைய அரசு 2026-ல் வெறும் 2,044 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்வதாகக் கூறுவதிலிருந்தே இவர்களின் ஏமாற்றுப் புத்தி விவசாயிகளுக்குத் தெளிவாகப் புரிந்துவிடும் என்று பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். மேலும், மண்ணில் கால் வைத்து ஏர் பிடித்து உழுத ஒரு விவசாயி என்ற முறையில் சொல்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ள அவர், சோறு போடும் விவசாயிக் கடவுளுக்கு நிகரான பச்சைத் துண்டு அணிந்த உழவர்களை ஏமாற்ற வேண்டாம் என்றும், விவசாயிகளை ஏமாற்றும் எந்தவொரு அரசும் நிலைத்ததாகச் சரித்திரமே இல்லை என்றும் எச்சரித்துள்ளார்.
