மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலுக்கு நேற்று மாலை 5.30 மணியளவில் வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். அவர் மீனாட்சி அம்மன் சந்நிதியில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த வேளையில், திடீரென கோவிலுக்குள் மின்வெட்டு ஏற்பட்டு கோவில் வளாகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. அதன்பின் சில நிமிடங்களில் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சுந்தரேசுவரர் சுவாமியையும் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களிடம் பேசுகையில், “மீனாட்சி அம்மனைப் பிரார்த்தனை செய்யும் போது கூட மின்வெட்டு ஏற்படுகிறது; இந்த ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழவும் முடியாது, நிம்மதியாகச் சாமி தரிசனம் செய்யவும் முடியாது” என்று ஆவேசத்துடன் தெரிவித்துச் சென்றார்.
இச்சம்பவம் குறித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தரப்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோவிலில் 350 KVA திறன் கொண்ட உயர் அழுத்த மின் இணைப்பும் (HT SC), அவசரகால பயன்பாட்டிற்காக இரண்டு 125 KVA திறன் கொண்ட மின்சார ஜெனரேட்டர்களும் உள்ளன. கோவில் வளாகத்திற்கு மிக முக்கியப் பிரமுகர்கள் வருகை தரவுள்ள நிலையில், மின்சார ஆய்வாளர் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் சில பராமரிப்புப் பணிகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாலை 4.20 மணிக்கு மின் விநியோகம் ஜெனரேட்டருக்கு மாற்றப்பட்டு பணிகள் தொடங்கின. பணிகள் நிறைவடைந்ததும் மாலை 5.35 மணிக்கு மீண்டும் முதன்மை மின்வாரிய தொகுப்பிற்கு மின் இணைப்பு மாற்றப்பட்டதாகவும், இதற்கு வெறும் 1.5 நிமிடங்கள் மட்டுமே ஆகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து கோவில் மின்சாரப் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், “துணைத் தலைவர் (துணை ஜனாதிபதி) கோவிலுக்கு வருகை தரவுள்ளதால், பழுதடைந்த மின்விசிறிகள் மற்றும் மின்வழங்கு கம்பிகளை மாற்றுவதற்காகவே தற்காலிகமாக மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுப் பராமரிப்பு வேலைகள் பார்க்கப்பட்டன. அதன்பின் உடனடியாக ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி அவர்கள் கோவிலுக்குள் இருந்தது எங்களுக்குத் தெரியாது; அவர் வந்திருப்பது தெரிந்திருந்தால் அவர் தரிசனம் முடித்துச் சென்ற பிறகே இந்தப் பணிகளை மேற்கொண்டு இருப்போம்” என்று தெரிவித்தனர்.
முன்னதாக இச்சம்பவம் தொடர்பாகப் பேசிய மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை, “மின்தடை ஏற்பட்ட போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்காக மட்டும் ஜெனரேட்டர் இயக்கப்படவில்லை. கோவிலுக்குள் இருக்கும் பொது பக்தர்கள் அனைவரும் சிரமமின்றிச் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே வழக்கமான நடைமுறைப்படி உடனடியாக ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டது” என்று விளக்கமளித்துள்ளார்.
