தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த செங்கோட்டையன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஒரு காலத்தில் தனது நெருங்கிய நண்பராக இருந்த செங்கோட்டையன், அமைச்சர் பதவிக்காகத் தன்னிடம் கண்ணீர் வடித்தார் என்றும், அவர் மிகவும் பொறாமை குணம் கொண்டவர் என்றும் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
செங்கோட்டையன் அதிமுகவில் இருந்துகொண்டே திமுகவின் உளவாளியாகச் செயல்பட்டார் என்றும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவர் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் பழனிசாமி குற்றம்சாட்டினார். மாணவர்களுக்குக் கருணாநிதி படம் போட்ட சைக்கிள்களைக் கொடுத்தவர் அவர்தான் என்று குறிப்பிட்ட இபிஎஸ், அதிமுகவை உடைக்கத் திமுகவுடன் அவர் கைகோர்த்ததாகவும், ஒரு கல்லூரியைக் கட்ட அவருக்கு எப்படி நிதி வந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
செங்கோட்டையன் வயதுக்கு ஏற்றார் போலப் பேச வேண்டும் என்று எச்சரித்த எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகள் சோதனைக்கு வந்தபோது பணத்தை ஆற்றில் விட்டவர் அவர்தான் என்று கூறினார். தன்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிட்டால் செங்கோட்டையன் வீதியில் கூட நடக்க முடியாது என்றும், தேவைப்பட்டால் அந்த ஆதாரங்களைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பத் தயார் என்றும் அவர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
