“மின் இணைப்பு துண்டிக்கப்படும்” என போலி குறுஞ்செய்தி அனுப்பி, மின்சார வாரியத்தின் பெயரில் பொதுமக்கள் பணத்தைச் சூறையாடும் புதிய வகை சைபர் மோசடி குறித்துக் சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்ட இணையதளத்தைப் பயன்படுத்தும் அப்பாவி மக்களைக் குறிவைத்து, அவர்களின் தனிப்பட்ட தகவல்களையும் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையும் திருடும் நோக்கத்தோடு இத்தகைய குற்றங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு, “உங்களின் கடந்த மாத மின்சாரக் கட்டணம் புதுப்பிக்கப்படவில்லை. அதனால் இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும்” என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணைத் தொடர்புகொண்டபோது, மின்வாரிய அதிகாரி போல நடித்த நபர், வாட்ஸ்அப் மூலம் விவரங்களைப் பெற்றுப் பணத்தைப் பறிக்க முயன்றுள்ளார். சந்தேகமடைந்த அவர் உடனடியாக உள்ளூர் மின்வாரிய உதவிப் பொறியாளரைத் தொடர்புகொண்டு விசாரித்ததால், நல்வாய்ப்பாகப் பண இழப்பில் இருந்து தப்பியுள்ளார்.
மின்சார வாரியம் ஒருபோதும் இதுபோன்று தனிப்பட்ட எண்களில் இருந்தோ அல்லது வாட்ஸ்அப் வாயிலாகவோ குறுஞ்செய்தி அனுப்பிப் பணம் கேட்காது என்றும், மின் கட்டணத் தரவுகளைத் திருடி மோசடிப் பேர்வழிகள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகவும் காவல் துறையினர் தெளிவுபடுத்தியுள்ளனர். இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான எண்களிலிருந்து வரும் அழைப்புகளையோ அல்லது குறுஞ்செய்திகளையோ பொதுமக்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.
போலி குறுஞ்செய்திகளை நம்பி மக்கள் தங்களின் வங்கி விவரங்கள், கடவுச்சொல் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்தளித்து ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஒருவேளை இத்தகைய சைபர் மோசடிகளால் பாதிக்கப்பட்டாலோ அல்லது சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தாலோ, பொதுமக்கள் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
