“காங்கிரஸ் ஒரு தலைவலி.. கழட்டி விடுங்க”…. திமுகவிற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த ‘அல்டிமேட்’ அட்வைஸ்… பரபரப்பு பதிவு….!

By Nanthini on மாசி 26, 2026

Spread the love

தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை ஒட்டி, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த தேர்தல்களில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், இந்த முறை 39 தொகுதிகள் வரை கேட்டு அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், திமுகவோ 22 இடங்களுக்கு மேல் ஒதுக்கத் தயாராக இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

இந்த அரசியல் சூழலை விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ள பிரபல சினிமா விமர்சகர் ‘ப்ளூ சட்டை’ மாறன், காங்கிரஸ் கட்சியை ஒரு “தலைவலி” என்று கடுமையாகச் சாடியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமாக மக்கள் செல்வாக்கு ஏதும் இல்லை என்றும், பல ஆண்டுகளாக திமுகவின் முதுகில் சவாரி செய்து கொண்டு சுயலாபம் மட்டுமே அடைந்து வருவதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

   

மேலும், மத்திய ஆட்சியில் அமரும் வாய்ப்பு காங்கிரஸிற்கு மீண்டும் கிடைக்குமா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி என்று விமர்சித்துள்ள அவர், திமுக இந்தக் கூட்டணியில் இருந்து காங்கிரஸைக் கழட்டி விடுவதற்கு இதுவே சரியான தருணம் என்று கூறியுள்ளார். “இந்த வாய்ப்பையும் திமுக தவறவிட்டால், அது அந்தத் தளபதியின் (முக ஸ்டாலின்) தலைவிதி” என்றும் அவர் தனது பதிவில் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.

   

இருப்பினும், காங்கிரஸ் தரப்பில் இத்தகைய விமர்சனங்கள் மறுக்கப்பட்டுள்ளன. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், திமுக உடனான கூட்டணி வலுவாக இருப்பதாகவும், மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் திமுக ஆதரவுடன் போட்டியிடுவார் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். பாஜக போன்ற சக்திகளுக்கு மறைமுகமாக உதவும் சிலர் இத்தகைய வதந்திகளைப் பரப்புவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.