வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் 13-வது முறையாகப் போட்டியிடும் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மகன் கதிர் ஆனந்த் எம்பியின் மனைவி சங்கீதா மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுத்தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகனிடம், “துரைமுருகனுக்கு வயதாகிவிட்டது, அவரால் நடக்கக் கூட முடியவில்லை; வெறும் பெருமைக்காகவே போட்டியிடுகிறார்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குத் தனது பாணியிலேயே பதிலடி கொடுத்த துரைமுருகன், எடப்பாடி பழனிசாமி பேசும் பல பொய்களில் இதுவும் ஒன்று என்று சாடினார். மேலும், தனது உடல் வலிமை குறித்துப் பேசிய எடப்பாடிக்குச் சவால் விடுத்த அவர், “வேண்டுமென்றால் என்னுடன் நடைப்போட்டி பந்தயத்திற்கு எடப்பாடி பழனிசாமியை வரச் சொல்லுங்கள், அப்போது பார்த்துவிடலாம் யார் ஜெயிக்கிறார்கள் என்று” எனக் கிண்டலாகக் குறிப்பிட்டார். அமைச்சரின் இந்த அதிரடிச் சவால் வேலூர் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
