கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த திமுக, இந்த 2026 தேர்தலில் 200 தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற முழு நம்பிக்கையில் இருந்தது. ஆனால், தமிழக அரசியல் களம் எதிர்பாராத திருப்பத்தைக் கண்டது; புதிதாகக் கட்சித் தொடங்கிய தவெக தலைவர் விஜய், பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகள் திமுகவிற்குப் பேரிடியாக அமைந்ததோடு, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினே தவெக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியது அக்கட்சியினரை மீளா அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வேலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் மூத்த தலைவரும் பொருளாளருமான துரைமுருகனும் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தல் தோல்வியின் சுவடுகள் மறைவதற்குள், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற திமுக மகளிர் கூட்டத்தில் அரங்கேறிய ஒரு நிகழ்வு அக்கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்த நிலையில், மூத்த தலைவர் துரைமுருகனும் அங்கு வந்தார். ஆனால், எப்போதும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளால் சூழப்பட்டிருக்கும் அறிவாலயத்தின் வாசலில், இந்த முறை துரைமுருகனை வரவேற்க ஒரு நிர்வாகி கூட இல்லை. வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இருக்கும் அவரை கைப்பிடித்து மேடைக்கு அழைத்துச் செல்லவும் யாரும் முன்வராததால் கடும் அதிருப்தியடைந்தார். இதனால் ஆவேசமடைந்த துரைமுருகன், கூட்டத்தில் கலந்து கொள்ளாமலேயே உடனடியாகத் தனது காரில் ஏறி அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இந்தச் சம்பவம் தேர்தல் தோல்விக்குப் பின் திமுகவின் உட்கட்சிப் பூசலையும், மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்படுவதையும் வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
