தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 16ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது.
இப்படியான நிலையில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று அதே பகுதிகளில் கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளை ஒட்டி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
