கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம், அதானி தாலுகா, கடகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பர்குண்டா (39). டிரைவராக வேலை பார்த்து வரும் இவருக்கு, ஷோபா (35) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர்களுக்குத் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஷோபா அங்குள்ள ஒரு பள்ளியில் உணவு சமைக்கும் வேலை செய்து வந்துள்ளார். பர்குண்டாவுக்குத் தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பர்குண்டா தினமும் மது அருந்திவிட்டு வந்து, தனது மனைவி ஷோபாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்றும் அதேபோல் மதுபோதையில் வந்த பர்குண்டா, ஷோபாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளார். பின்னர் இருவரும் உறங்கச் சென்ற நிலையில், நள்ளிரவில் திடீரென எழுந்த பர்குண்டா, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த மனைவி ஷோபாவைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஷோபா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாய் வெட்டப்பட்டதைப் பார்த்துக் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ஷோபா இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அதானி போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஷோபாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலையைச் செய்துவிட்டுத் தப்பியோடித் தலைமறைவாக இருந்த கணவர் பர்குண்டாவை போலீசார் உடனடியாகக் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
