வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் இருந்து 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் குடியாத்தம் வழியாக சேலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்தை காட்பாடி கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடசாமி (59) என்ற ஓட்டுநர் இயக்கி வந்தார். பேருந்து குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றோரம் உள்ள புதிய பைபாஸ் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநர் வெங்கடசாமிக்கு திடீரெனக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. கடுமையான வலி இருந்தபோதிலும், பதறிப்போய் பேருந்தைக் கட்டுப்பாடில்லாமல் இயக்காமல், மிகுந்த சாமர்த்தியத்துடன் மெதுவாகச் இயக்கிச் சாலை ஓரத்தில் பத்திரமாக நிறுத்திவிட்டு அப்படியே மயங்கிச் சுருண்டு விழுந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். “அவர் பேருந்தைச் சரியாக நிறுத்தவில்லை என்றால் கெங்கையம்மன் பாலத்தை இடித்துக்கொண்டு ஆற்றில் விழுந்து பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும், தன் உயிரைக் கொடுத்து எங்களைக் காப்பாற்றிவிட்டார்” எனப் பயணிகள் கண்ணீர் மல்கக் கதறி அழுது தங்களின் நன்றியையும் சோகத்தையும் தெரிவித்தனர்.
