புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த 2024 மார்ச் மாதம் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியது. கழிவுநீர் கால்வாயில் சாக்கில் சுற்றப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (20) மற்றும் விவேகானந்தன் (56) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் விவேகானந்தன் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்ட நிலையில், முக்கியக் குற்றவாளியான கருணாஸ் மீதான வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் 54 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, மருத்துவ மற்றும் தடயவியல் சான்றுகள் உட்பட 81 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. சிறுமி கொல்லப்படுவதற்கு முன்பு மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டதையும், குற்றவாளியின் இரக்கமற்ற மிருகத்தனமான செயலையும் பிரேதப் பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியது. இது ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிய “அரிதிலும் அரிதான” வழக்கு என்பதால், குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, சிறுமியைக் கடத்தியது, சட்டவிரோதமாக அடைத்து வைத்தது, பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் தடயங்களை அழித்தது ஆகிய அனைத்துப் பிரிவுகளின் கீழும் கருணாஸ் குற்றவாளி என இன்று உறுதி செய்தார். இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது, நீதிமன்ற வளாகத்தில் பெண் கமாண்டோக்கள் உட்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கான தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
தற்போது கருணாஸ் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், மே 5-ஆம் தேதி வாதி மற்றும் பிரதிவாதி தரப்பின் இறுதி வாதங்கள் நடைபெறவுள்ளன. அன்றைய தினமே அல்லது அதற்குப் பிறகோ கருணாஸிற்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை குறித்த முழு விவரங்களையும் நீதிமன்றம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்று உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரும், சமூக ஆர்வலர்களும் ஒரு வருடமாகப் போராடி வரும் நிலையில், இந்தத் தீர்ப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
