மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, தென்னிந்திய அளவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷுடன் ‘கொடி’ படத்தில் அறிமுகமான இவர், சமீபத்தில் வெளியான ‘டிராகன்’ மற்றும் ‘பைசன்’ ஆகிய திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். கிராமத்து பெண், நவீன காலப் பெண் எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தமிழ் திரையுலகில் தனது மார்க்கெட்டைத் தக்கவைத்து வருகிறார்.
திரைப்படங்களின் வெற்றியைத் தாண்டி, ‘பைசன்’ படத்தில் இணைந்து நடித்த துருவ் விக்ரமுடன் அனுபமா காதலில் இருப்பதாகச் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. அவர்கள் இருவரும் ஒன்றாகப் பயணித்த புகைப்படங்களும் இணையத்தில் கவனத்தை ஈர்த்தன. ஆனால், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் துருவ்வின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் பேசிய அனுபமா, அந்த உறவு மிகவும் மன உளைச்சலைத் தரும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருந்ததாகவும், அதில் பல சவால்களைச் சந்தித்ததாகவும் கூறி அத்தொடர்பு முடிவுக்கு வந்ததை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, தன் மீதும் தன் திரைப்படங்கள் மீதும் வைக்கப்படும் எதிர்மறை விமர்சனங்கள் குறித்து சமீபத்திய நிகழ்வொன்றில் அவர் வெளிப்படையாகப் பேசினார். ஒரு திரைப்படம் சரியாகச் செயல்படாதபோது வரும் ஆரோக்கியமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளலாம் எனவும், ஆனால் குறிப்பிட்ட நோக்கத்தோடு பணம் வாங்கிக்கொண்டு திட்டமிட்டு செய்யப்படும் விமர்சனங்களுக்குத் தான் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், இணையத்தில் வரும் அனைத்து கருத்துகளுக்கும் எதிர்வினையாற்ற முடியாது என்றும், இது தனது கர்வமோ அகம்பாவமோ அல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
