நாகப்பட்டினத்தில் இரட்டைக்கொலை பயங்கரம்… ஊரே திரண்டு நின்ற காட்சிகள்… வெவ்வேறு இடங்களில் சடலங்கள் மீட்பு… வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்….!!

By Muthu Mani on வைகாசி 14, 2026

Spread the love

நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இரண்டு கொலை சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. நாகை பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ரயில்வே குட்செட் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், நாகை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த இரட்டை மரணங்கள் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகப்பட்டினம் ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், ரயில் நிலைய பகுதியில் கொலை செய்யப்பட்டவர் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார் (40) என்பது தெரியவந்தது. கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த இவர், தாயாரின் மறைவுக்காக ஊருக்கு வந்திருந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல், மருத்துவமனை வளாகத்தில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண், கீழ்வேளூரைச் சேர்ந்த சித்ரா (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து பேருந்து நிலையப் பகுதிகளில் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது.

   

ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரண்டு கொலைகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் மற்றும் டி.எஸ்.பி ராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வரும் வெளிப்பாளையம் மற்றும் நாகை நகர போலீசார், கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்த இந்த மரணங்கள் நாகை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.