“யாரு பெருசுனு அடிச்சுக் காட்டு”…. “டபுள் எஞ்சினா? டப்பா எஞ்சினா?”… 2026 தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கிறது….!

By Nanthini on தை 28, 2026

Spread the love

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் அதிமுக மற்றும் திமுக ஆதரவாளர்களிடையே மூண்டுள்ள ‘போஸ்டர் யுத்தம்’ பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, சுவர்களை ஆக்கிரமித்துள்ள இந்த போஸ்டர்கள் அரசியல் கட்சிகளின் பலப்பரீட்சையை பறைசாற்றுகின்றன.

சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை முன்னிலைப்படுத்தி அதிமுகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் மற்றும் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்கள் அந்த போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளன. அதிமுகவின் இந்த அதிரடி முன்னெடுப்பு அக்கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அதே இடங்களில் அடையாளம் தெரியாத நபர்களால் ஒட்டப்பட்டுள்ள மற்றொரு போஸ்டர் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதில், “டபுள் எஞ்சின் – டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது; அடிமைகளை விரட்டுவோம் – தமிழ்நாட்டைக் காப்போம்” என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஒரு ரயிலில் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொங்குவது போன்ற புகைப்படங்கள் அடங்கிய இந்த போஸ்டர், அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது.

   

யார் பெரியவர் என்பதைக் காட்டும் வகையில் இருதரப்பும் மாறி மாறி ஒட்டியுள்ள இந்த போஸ்டர்களால் தூத்துக்குடி மாவட்டமே அரசியல் போர்க்களமாக மாறியுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை எனப் பிரதான கட்சிகள் பிஸியாக இருக்கும் வேளையில், இந்த போஸ்டர் கலாச்சாரம் தேர்தல் களம் எவ்வளவு தீவிரமாக இருக்கப்போகிறது என்பதற்கான முன்னோட்டமாகத் திகழ்கிறது.