கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியின் 7-வது வார்டுக்குட்பட்ட கோழியூர் திருவள்ளுவர் நகரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லை எனக் கூறி, வரும் தேர்தல்களில் வாக்கு கேட்க அரசியல் கட்சியினர் யாரும் வரக்கூடாது என அப்பகுதி மக்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இவர்களின் முக்கிய கோரிக்கையாக, திருவள்ளுவர் நகரின் நான்கு தெருக்களிலும் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து சிறுபாலம் கட்ட வேண்டும் என்பதும், ஊர் திருவிழாவின் போது சாமி ஊர்வலம் செல்வதற்கு ஏதுவாக 300 மீட்டர் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என்பதும் உள்ளது. மேலும், காலி நத்தத்தில் வசிக்கும் தகுதியுள்ள நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றும், பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கும் கோழியூர் முருகன் கோவிலைப் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
விவசாயம் சார்ந்த கோரிக்கையாக, திருவள்ளுவர் நகரில் உள்ள வெலிங்டன் வாய்க்காலில் விவசாய உபகரணங்களை எளிதாகக் கொண்டு செல்ல புதிய பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் மக்கள் முன்வைத்துள்ளனர். இந்த நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், தங்கள் பகுதிக்குள் ஓட்டு கேட்டு நுழைய யாருக்கும் அனுமதி இல்லை எனப் பொதுமக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
