ஹார்முஸ் காரணம் இல்லையா?…. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு புதுக் குண்டை தூக்கிப்போட்ட டொனால்ட் ட்ரம்ப்…. அதிர்ச்சியில் உலக நாடுகள்…!

By Nanthini on ஐப்பசி 8, 2026

Spread the love

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் ஜலசந்தி காரணமல்ல என்றும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களே முதன்மை காரணம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பதிவில் இது குறித்துக் குறிப்பிட்டுள்ள அவர், ஜனநாயகக் கட்சியினரின் கொள்கைகளும் ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைனின் ராணுவ நடவடிக்கைகளுமே இந்த விலை ஏற்றத்திற்கு வழிவகுத்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ட்ரம்ப்பின் கூற்றுப்படி, கலிபோர்னியா போன்ற ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நடக்கும் அமெரிக்க மாநிலங்களில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. அதே வேளையில், உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவின் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கித் தகர்த்து வருகிறது. இதன் காரணமாகவே உலக அளவில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டு, டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக அவர் விவரித்துள்ளார்.

   

இருப்பினும், சந்தை நிலவரங்கள் மற்றும் சர்வதேச ராய்ட்டர்ஸ் அறிக்கைகளின்படி, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலே இந்த நெருக்கடிக்கு மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகத்தை தீர்மானிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதும், அப்பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தொடர் ராணுவ நடவடிக்கைகளுமே கச்சா எண்ணெய் சந்தையில் கடுமையான தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளன.

   

ஈரானியத் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் உக்ரைனின் தாக்குதல்களால் உலகளாவிய எரிசக்தி உள்கட்டமைப்பு பலத்த சேதமடைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்தும், விநியோகம் குறைந்தும் காணப்படுவதால், அமெரிக்கா உட்பட உலக நாடுகள் அனைத்தும் கடுமையான பொருளாதாரத் தாக்கத்தையும் விலைவாசி உயர்வையும் எதிர்கொண்டு வருகின்றன.