அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தற்போது உலகையே உலுக்கும் போர் பதற்றமாக மாறியுள்ளது. ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், இல்லையெனில் ஒரே நாளில் அந்நாட்டின் உட்கட்டமைப்புகளைத் தகர்த்து, எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவோம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, செவ்வாய்க்கிழமைக்குள் ஈரான் உடன்பாட்டுக்கு வராவிட்டால், அந்நாட்டின் மின் கட்டமைப்புகள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளதால், அப்பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
டிரம்பின் இந்த இறுதி எச்சரிக்கையைத் தொடர்ந்து, நாட்டின் முக்கிய மின் நிலையங்களைப் பாதுகாக்க ஈரான் அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஈரானிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அலிரெசா ரஹிமி விடுத்துள்ள அழைப்பில், மின் நிலையங்களைச் சுற்றி இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் ஒன்றிணைந்து ‘மனிதச் சங்கிலி’ அமைத்து தற்காப்புப் போராட்டத்தை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மின் கட்டமைப்பு வசதிகளைப் பாதுகாக்க, இளைஞர்களே முன்வந்து இந்தப் பரிந்துரையை வழங்கியதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா முன்மொழிந்த 45 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. தற்காலிக போர்நிறுத்தம் தங்களுக்கு உடன்பாடல்ல என்றும், போர் முற்றிலுமாக முடிவுக்கு வர வேண்டும் என்பதே தங்களின் ஒரே நிபந்தனை என்றும் ஈரான் அறிவித்துள்ளது. கடந்த காலப் பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைச் சுட்டிக்காட்டியுள்ள ஈரான் தலைமை, டிரம்ப் நிர்வாகத்தின் மீது தங்களுக்குத் துளியும் நம்பிக்கையில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி மோதல் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
ஒருபுறம் ஏவுகணைக் குவிப்பு மற்றும் மிரட்டல்கள் எனப் பதற்றம் உச்சத்தில் இருந்தாலும், மறுபுறம் திரைக்குப் பின்னால் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. பிராந்திய அளவிலான உயர் அதிகாரிகள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். அதிபர் டிரம்பும் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்திருப்பதாகவே சூசகமாகத் தெரிவித்து வரும் நிலையில், இன்னும் சில மணி நேரங்களில் முடியப்போகும் கெடுவுக்குப் பின் போர் வெடிக்குமா அல்லது அமைதி திரும்புமா என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
