கரூர் மாவட்டம் குளித்தலை உழவர் சந்தை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குளித்தலை கலப்புக்காலனியைச் சேர்ந்த சவுராபானு (50) என்ற கூலித் தொழிலாளி, நேற்று மதியம் அந்தப் பகுதியில் நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக ஒரு வெறிநாய் அவரைத் தாக்கியது. அந்த நாய் அவரது கையைத் தீவிரமாகக் கடித்ததில், அவரது வலது கை மோதிர விரல் துண்டாகித் தெறித்தது. துண்டான விரலை கையில் எடுத்துக்கொண்டு அவர் பதற்றத்துடன் குளித்தலை அரசு மருத்துவமனைக்குச் சென்றது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சவுராபானுவைத் தவிர, அதே நாய் அப்பகுதியில் சென்ற மேலும் நான்கு பேரையும் துரத்தித் துரத்திக் கடித்தது. வாலாந்தூரைச் சேர்ந்த மதியழகன், பணிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னதாளை மற்றும் அக்காணிமேட்டைச் சேர்ந்த தனம் உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயமடைந்து தற்போது குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து ஐந்து பேரை நாய் கடித்துக் குதறிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் உருவாக்கியுள்ளது.
குளித்தலை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகி வருவதாகவும், இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த நாய்களிடம் இருந்து தப்பிக்க முடிவதில்லை. எனவே, மாவட்ட நிர்வாகமும் நகராட்சி அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, வெறிநாய்களைப் பிடிப்பதற்கும், தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
