“கூல் டிரிங்க்ஸ் வேண்டாம்…” கோடை வெயிலில் குழந்தைகளைப் பாதுகாக்க மருத்துவர் சொல்லும் அட்வைஸ்…!!

By Devi Ramu on சித்திரை 23, 2026

Spread the love

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள் தகுந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். கடைகளில் விற்கப்படும் செயற்கை நிறமூட்டிகள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களைத் தவிர்த்து, இளநீர், மோர் போன்ற இயற்கை பானங்களை குழந்தைகளுக்கு அளிப்பது சிறந்தது. இளநீரில் உள்ள தாதுக்கள் நீர்ச்சத்தை சமன்படுத்தும்; அதேபோல் மோரில் சீரகம் சேர்த்து வழங்குவது செரிமானத்திற்கும் உடல் குளிர்ச்சிக்கும் பெரிதும் உதவும். சர்க்கரை சேர்க்காத தர்பூசணி மற்றும் எலுமிச்சை சாறுகள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

குளிர்சாதனப் பெட்டியில் வைத்த மிகக் குளிர்ந்த நீரை நேரடியாகக் கொடுப்பது குழந்தைகளுக்குத் தொண்டை வலி மற்றும் சளியை உண்டாக்கும் என்பதால், அதற்கு மாற்றாக மண்பானை நீரைப் பயன்படுத்துவது நலம் தரும். அதிக குளிர்ச்சியான பானங்கள் நுரையீரலில் உள்ள ‘சிலியா’ உறுப்புகளின் செயல்பாட்டை மந்தமாக்கி, கிருமிகளை வெளியேற்றுவதில் தடையை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், கார்போனேட்டட் பானங்களில் உள்ள வேதிப்பொருட்கள் சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால் அவற்றைத் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். கோடை காலத்தில் பாரம்பரிய உணவு முறைகளே குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உகந்தது.