INSPIRATION
மனிதநேய தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று… அவரின் சாதனைகள் என்ன தெரியுமா…?
தமிழ்நாட்டில் மதுரையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிறந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவரது இயற்பெயர் விஜயராஜ் அழகர் சுவாமி என்பதாகும். சிறுவயதில் இருந்து சினிமாவில் அதிக நாட்டம் கொண்டிருந்தவர் விஜயகாந்த். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாத விஜயகாந்த் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று எண்ணி மதுரையை விட்டு வெளியேறி சென்னைக்கு குடிபெயர்ந்தார்.
சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு குடி பெயர்வதற்கு முன்பாக மதுரையில் அமைந்துள்ள பிரபல ராசி ஸ்டுடியோவில் படப்பிடிப்பு எடுத்தார் விஜயகாந்த். அந்தப் புகைப்படம் கொண்டு திரையுலகில் நுழைய முயற்சித்தார். அவரது முயற்சியின் பலனாக 1978 ஆம் ஆண்டு என் கேள்விக்கு என்ன பதில் என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் தம்பியாக விஜயகாந்த் துணை நடிகராக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதற்காக 100 ரூபாய் முன்பணம் பெற்றார்.
ஆனால் விஜயகாந்த் அந்த கதாபாத்திரம் பொருத்தமாக இருக்காது என்று நினைத்த இயக்குனர் அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார். இதுபோன்று விஜயகாந்த் அவரது நடிப்பு வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பல தோல்விகளை நிராகரிப்புகளை சந்தித்தார். அதுமட்டுமல்லாது அவரது தோற்றம் மற்றும் கருமை நிறத்தினால் ராதிகா சரத்குமார், சரிதா, அம்பிகா மற்றும் ராதா உட்பட பல முன்னணி நடிகைகள் அவருடன் நடிக்க தயங்கியதால் அவமானத்தையும் எதிர்கொண்டார் கேப்டன் விஜயகாந்த்.
1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தில் தோன்றினார் விஜயகாந்த். இந்த படம் தோல்வி அடைந்தது. தொடர்ந்து அகல்விளக்கு, நீரோட்டம் போன்ற படங்களில் நடித்தார் விஜயகாந்த். இதுவும் தோல்வி அடைந்தன. 1980 ஆம் ஆண்டு தூரத்து இடி முழக்கம் என்ற திரைப்படம் விஜயகாந்த்க்கு நல்ல பெயரை பெற்று தந்து திருப்புமுனையாக அமைந்தது.
தொடர்ந்து சிவப்பு மல்லி, ஜாதிக்கொரு நீதி என்ற புரட்சிகர மற்றும் தீவிர சிந்தனைகள் கொண்ட கதைக்களத்தை தேர்ந்தெடுத்து விஜயகாந்த் நடித்தார். அடி மேல் அடி வைத்து மேலே எழுந்து ஒரு நாயகனாக 1990 இல் ஒரு நிலையான இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார் கேப்டன் விஜயகாந்த். திரைப்பட தயாரிப்பாளரான இப்ராஹிம் ராவுத்தரின் ஆதரவை பெற்ற விஜயகாந்த் அவரின் ஆதரவால் 1980 மற்றும் 90களில் நல்ல வளர்ச்சியை அடைந்தார்.
தொடர்ந்து புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், ராஜதுரை, காந்தி பிறந்த மண், என் ஆசை மச்சான் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஆனார் விஜயகாந்த். அதுமட்டுமில்லாது கேப்டன் விஜயகாந்த் சினிமா வட்டாரங்களில் எண்ணற்ற உதவிகளையும் அள்ளிக் கொடுக்கும் கர்ணனாகவும் பல பேருக்கு வாழ்க்கை அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கி திறம்பட நடத்தி எதிர்க்கட்சியாகவும் இருந்தார். வடிவேலு போன்ற பல கலைஞர்களை தமிழ் சினிமாவில் வளர்த்து விட்டவர் விஜயகாந்த். அனைவருக்கும் படப்பிடிப்பின் போது சமமான சாப்பாடு தான் வழங்க வேண்டும். அவர்கள் இலை போட்டு சாப்பிட வேண்டும் என்று ஒரு புது முறையை கொண்டு வந்தவர் விஜயகாந்த். இந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக பதவி வகித்த விஜயகாந்த் நடிகர் சங்கத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார். நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை கட்ட வேண்டும் என்று விரும்பி நடிகர் சங்க நலனுக்காக வெளிநாடுகளில் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி நடிகர் சங்கத்தை திறம்பட முன்னேற்றியவர் விஜயகாந்த்.
தனது வாழ்வில் நடிப்பிற்காகவும் சாதனைகளுக்காகவும் கலைமாமணி விருது, சிறந்த நடிகருக்கான விருது, பிலிம்பேர் விருது ஆகியவற்றை வென்றுள்ளார் விஜயகாந்த். இவரே கருப்பு தங்கம் எனவும் மனிதநேய தலைவர் எனவும் மக்கள் அன்போடு அழைப்பர். எப்போதும் சுயநலமற்று தன்னலமற்று மற்றவர்களுக்காகவே யோசிக்கும் ஒரு தலைவராகவே வாழ்ந்து மறைந்துள்ளார் கேப்டன் விஜயகாந்த்.