மருக்கள் (Warts) என்பவை ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ (HPV) தொற்றால் தோலில் ஏற்படக்கூடிய சிறிய வளர்ச்சியாகும். இவை பொதுவாக வலியற்றவை என்றாலும், முகம், கழுத்து, அக்குள் மற்றும் கைகளில் தோன்றும்போது அவை ஒருவரின் அழகைக் குறைப்பதாகக் கருதப்படுகிறது. இதனால் பலரும் மன ரீதியாக ஒருவித அசௌகரியத்தை உணர்கின்றனர். இத்தகைய மருக்களை அறுவை சிகிச்சை இன்றி வீட்டிலுள்ள எளிய பொருட்களைக் கொண்டு இயற்கையாகவே அகற்ற முடியும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மருக்களை நீக்க ஆப்பிள் சிடார் வினிகர் ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. இதிலுள்ள அமிலத்தன்மை மருக்களைச் சுருங்கச் செய்து காலப்போக்கில் உதிரச் செய்கிறது. இரண்டு பங்கு வினிகருடன் ஒரு பங்கு தண்ணீர் கலந்து, பஞ்சின் உதவியால் மரு உள்ள இடத்தில் இரவு முழுவதும் வைத்து காலையில் கழுவி வரலாம். அதேபோல், பூண்டில் உள்ள ‘அல்லிசின்’ (Allicin) என்ற வேதிப்பொருள் வைரஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. பூண்டு விழுதை மருவின் மீது தடவி தொடர்ந்து கட்டி வருவதன் மூலம் மருக்கள் இயற்கையாகவே மறையத் தொடங்கும்.
சருமப் பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் கற்றாழை ஜெல்லும் மருக்களை அகற்ற உதவுகிறது. கற்றாழையில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் குளிர்ச்சித் தரும் பண்புகள் மருவினால் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதோடு, அவற்றைப் படிப்படியாக அகற்றவும் உதவுகின்றன. மேலும், நவீன காஸ்மெட்டிக் துறையில் பயன்படுத்தப்படும் சாலிசிலிக் அமிலம் (Salicylic Acid) கொண்ட சீரம்களும் மருக்களை உதிரச் செய்ய பெரிதும் உதவுகின்றன. இருப்பினும், உணர்திறன் மிக்க சருமம் கொண்டவர்கள் எதையும் பயன்படுத்துவதற்கு முன்பு ‘பேட்ச் டெஸ்ட்’ (Patch Test) செய்து கொள்வது பாதுகாப்பானது.
வீட்டு வைத்தியங்கள் ஒருவருக்கு வழங்கும் பலன் என்பது அவர்களின் சரும வகை மற்றும் மருவின் தன்மையைப் பொறுத்து மாறுபடலாம். சிலருக்கு சில நாட்களிலேயே பலன் கிடைக்கும், சிலருக்கு நீண்ட காலம் ஆகலாம். ஒருவேளை மருக்கள் மிக அதிகமாகவோ அல்லது வலியை உண்டாக்குவதாகவோ இருந்தால், தோல் மருத்துவரை அணுகி லேசர் சிகிச்சை, கிரையோதெரபி அல்லது கெமிக்கல் பீலிங் போன்ற நவீன சிகிச்சை முறைகளைத் தேர்வு செய்வது சிறந்தது. அழகு மற்றும் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு இயற்கையான வழிகளே எப்போதும் பக்கவிளைவற்ற தீர்வாக அமையும்.
