மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மதிமுக மாவட்டச் செயலாளரும், தற்போதைய அதிமுக நிர்வாகியுமான மார்கோனி, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களையும் நேரடிச் சவாலையும் முன்வைத்துள்ளார்.
மேலும் துரை வைகோ ஒரு ‘கார்ப்பரேட் ரவுடி’ என்று சாடிய அவர், முதலில் அறிவிக்கப்பட்ட ‘தீப்பெட்டி’ சின்னத்தை விடுத்து, தோல்வி பயத்தின் காரணமாக திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது மதிமுகவை அடமானம் வைக்கும் செயல் எனச் சுட்டிக்காட்டினார். “உங்களுக்குத் திராணி இருந்தால், அறிவித்தபடி தீப்பெட்டி சின்னத்திலேயே தனித்து நின்று போட்டியிடுங்கள், உங்களை நான் தோற்கடித்துக் காட்டுகிறேன்” என அவர் பகிரங்கமாகச் சவால் விடுத்துள்ளார்.
மேலும், வைகோவின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து மார்கோனி அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துரை வைகோ தனது தந்தை வைகோவைத் தாக்கியதாகவும், இதில் வைகோவின் கை முறிந்து அவர் காயமடைந்ததாகவும் மார்கோனி குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் துரை வைகோவின் இத்தகைய போக்கால்தான் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விலகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், வைகோவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி இதுகுறித்து மத்திய புலனாய்வுத் துறையும், தமிழக காவல்துறையும் உரிய விசாரணை நடத்தி அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த அரசியல் மோதல் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
