தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் 2026 ஏப்ரல் 23-ஆம் தேதியை நோக்கி அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர். செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் கார்த்திக் தண்டபாணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதா நம்பியாரும் களம் காண்கின்றனர். இங்கு நிலவும் கடும் போட்டிக்கு இடையே, தேர்தல் பரப்புரையில் நடந்த ஒரு “காமெடி” கலாட்டா தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
செங்கல்பட்டு தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணியை பிரம்மாண்டமாக வரவேற்க அந்தந்தப் பகுதி திமுக நிர்வாகிகள் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். குறிப்பாக, பெண்கள் வரிசையாக நின்று மலர் தூவி வரவேற்பு அளிக்க மலர்தட்டுகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் கட்சி வேட்பாளரின் வருகைக்காக அவர்கள் காத்திருந்த வேளையில், எதிர்பாராத திருப்பமாக அந்த வழியாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அமுதா நம்பியாரின் பிரச்சார வாகனம் வந்துள்ளது.
யார் வருகிறார் என்று சரியாகக் கவனிக்காத நிலையில், “வேட்பாளர் வந்துவிட்டார்” என்ற சத்தத்தைக் கேட்டு, வரிசையில் நின்ற பெண்கள் ஆர்வத்துடன் அமுதா நம்பியார் மீது மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுகவினர் தமக்காகச் செய்த ஏற்பாடு, மாற்றுக்கட்சி வேட்பாளருக்குச் சாதகமாக மாறியதைக் கண்டு அமுதா நம்பியார் புன்னகையை மறைக்க முடியாமல் நெகிழ்ந்து போனார். தனக்குக் கிடைத்த இந்தத் தற்செயலான வரவேற்பை ஏற்றுக்கொண்ட அவர், மலர் தூவிய பெண்களுக்கு நன்றி தெரிவித்தபடி அங்கிருந்து நகர்ந்தார்.
இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. “திமுகவினர் செய்த ஏற்பாடு, நாம் தமிழர் வேட்பாளருக்கு லக்காக அமைந்துவிட்டது” என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். எந்த வேட்பாளர் வருகிறார் என்று கூடத் தெரியாமல் வரவேற்பு அளிக்கும் அளவுக்குத் தான் கள நிலவரம் இருக்கிறது என நாம் தமிழர் கட்சியினர் இந்த வீடியோவைப் பகிர்ந்து திமுகவினரைக் கிண்டல் செய்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் இத்தகைய சுவாரஸ்யமான நிகழ்வுகள் தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
