தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். அதற்காக விஜய்யும் தங்கள் கூட்டணியில் இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
மறுபக்கம் முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே பலமாக இருக்கும் தனது கூட்டணி மூலமாக ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியிலும் திமுக நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே பிரிந்து கிடக்கும் அதிமுக மீண்டும் ஒன்றுபட்டால் திமுக ஆட்சியை வீழ்த்தி விடலாம் என்று ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் வலியுறுத்தி வரும் நிலையில் இபிஎஸ் அதற்கு எல்லாம் இடம் கொடுக்காமல் தன்னந்தனி ஆளாக பாஜகவுடன் சேர்ந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை ஓபிஎஸ் சந்தித்தபோது திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதல்வர் கூறி இருக்கிறாரே என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார். திமுகவா என்று அழுத்தமாக கேட்ட உடனே சுதாகரித்துக் கொண்ட ஓபிஎஸ், மக்கள் பேசி கொள்கிறார்கள், என் மீது பழியை போட்டு விடாதீங்க சாமி என்று சிரித்துக்கொண்டே கூறி அங்கிருந்து நழுவினார். ஓபிஎஸ் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
