தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிா்ச்சி வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், திமுகவில் அமைப்பு ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்தத் தேர்தலில் ‘ஜென்-ஸி’ (Gen-Z) எனப்படும் இளம் தலைமுறையினரின் பேராதரவோடு தவெக வெற்றி பெற்றுள்ளதால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியிலேயே தவெக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியதும், 2021-ல் 133 இடங்களை வைத்திருந்த திமுக தற்போது வெறும் 59 தொகுதிகளாகச் சுருங்கியுள்ளதும் அக்கட்சியின் தலைமைக்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. தவெகவின் இந்த அரசியல் எழுச்சியை ஆரம்பத்திலேயே முடக்காவிட்டால் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால், திமுகவை அடிமட்டத்திலிருந்து சீரமைக்க மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார்.
இதன் முதற்கட்டமாக, தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய ஒவ்வொரு மண்டலத் தலைவர்களுக்கும் 3 முதல் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, தொண்டர்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 4.5 லட்சம் தொண்டர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், கட்சியின் கட்டமைப்பில் ‘பாஜக பாணியில்’ இளம் தலைவர்களுக்கும், பெண்களுக்கும் முக்கியப் பொறுப்புகளை வழங்க நிர்வாகிகள் பரிந்துரைத்துள்ளனர். விஜய்க்குப் பலமாக இருக்கும் இளைஞர் மற்றும் இளம்பெண்களைத் தன்வசப்படுத்த வேண்டுமானால், திமுகவிலும் இளைஞர் அணியை உற்சாகப்படுத்தி, அவர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை கட்சித் தலைமை தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
மேலும், அடிமட்ட நிர்வாகத்தைப் பலப்படுத்தும் நோக்கில், திமுகவில் உள்ள மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை தற்போதைய 72-லிருந்து 115 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தவெகவும் இதேபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டப் பிரிவுகளைக் கொண்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிப்பு கூடுதல் நிர்வாகிகளுக்குப் பதவி வழங்கவும், புதிய ரத்தத்தைக் கட்சிக்குள் பாய்ச்சவும் உதவும் என்று நம்பப்படுகிறது. சென்னையில் கட்சியின் பின்னடைவுக்குப் பொறுப்பேற்று முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு மீது விமர்சனங்கள் எழுந்துள்ள சூழலில், ஐ. பரந்தாமன் மற்றும் ரவீந்திரன் போன்ற மூத்த நிர்வாகிகள் வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கள ஆய்வு செய்து, தவறுகளைத் திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கி வருகின்றனர்.
மறுபுறம், தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய்யை விமர்சித்தால் அவர் இன்னும் வளர்ந்துவிடுவார் என்று மு.க.ஸ்டாலின் நினைத்து அமைதி காத்ததே திமுகவின் பின்னடைவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என நிர்வாகிகள் குமுறுகின்றனர். இதனால், இனிவரும் காலங்களில் விஜய் அரசின் ஒவ்வொரு தவறுகளையும், நிர்வாகக் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்க திமுக முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் விரைவில் திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும், உள்ளாட்சித் தேர்தலும் வரவிருப்பதால், அதற்குள் இந்த நிர்வாக சீர்திருத்தங்களைச் செய்து முடித்து, திமுக தனது இழந்த பலத்தைக் காட்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
