தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நீண்டகாலக் கூட்டணியான திமுகவிலிருந்து காங்கிரஸ் விலகி ஆளும் கட்சியுடன் கைகோர்த்துள்ளது. இந்த திடீர் அரசியல் திருப்பம் திமுக – காங்கிரஸ் தலைவர்களிடையே கடுமையான மோதலையும், ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் காங்கிரஸை இனி நம்ப முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ள திமுக தலைமை, தமக்கென ஒரு தனிப்பாதையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைக்கு எதிராக நாடு முழுவதும் மாபெரும் போராட்டங்களை நடத்தி வரும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) அமைப்பின் தலைவர் அபிஜீத் திப்கேவை, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சிஜேபியின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம், தேசிய அளவில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த திமுக முயன்று வருகிறது.
மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தேசியக் கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டிற்கும் மாற்றாக, புதிய ‘மூன்றாவது அணி’ ஒன்றை உருவாக்கும் முயற்சியில் திமுக தீவிரமாக இறங்கியுள்ளது. பிற மாநிலங்களில் உள்ள அதிருப்தி மாநிலக் கட்சிகள் மற்றும் வலுவான இளைஞர் இயக்கங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்த பிரச்சினையை தேசிய அளவிலான பொதுப் பிரச்சினையாக முன்னெடுக்க இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி தவெகவை ஆதரித்து வரும் தற்போதைய சூழலில், மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடி தேசிய அரசியல் நகர்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அபிஜீத் திப்கேவுடனான இந்தச் சந்திப்பு உறுதியானால், அது தமிழக அரசியல் மட்டுமல்லாமல், தேசிய அரசியலிலும் ஒரு புதிய மாற்றத்திற்கான பலமான தொடக்கப் புள்ளியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
