தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிகவுக்கு, ஒரு ராஜ்யசபா எம்பி பதவி தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் நடந்த மேல்சபை தேர்தலில் அதிமுக அந்த வாய்ப்பை வழங்காததால் தேமுதிக தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது. இதனால், வரவிருக்கும் தேர்தலில் கௌரவமான தொகுதிகளையும், ராஜ்யசபா பதவியையும் உறுதி செய்யும் கட்சியுடனேயே கூட்டணி அமைக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.
இந்தச் சூழலில், தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்களிடம் நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் ஒரு அதிரடியான திருப்பம் ஏற்பட்டுள்ளது. சுமார் 60 சதவீத நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டியுள்ளதாகத் தெரிகிறது. திமுக தரப்பிலும் ராஜ்யசபா பதவி குறித்த உறுதிமொழிகள் வழங்கப்பட்டதாக உலவும் தகவல்கள், “சர்ஜிக்கல் தேமுதிக” கூட்டத்தில் திமுகவின் பெயர் பலமாக ஒலிக்கக் காரணமாகியுள்ளது. அதே சமயம், அதிமுக கூட்டணியைத் தொடர வேண்டும் என்று ஒரு பிரிவினரும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைய வேண்டும் என்று ஒரு சிலரும் கருத்து தெரிவித்துள்ளதால் கட்சியில் ஒருமித்த முடிவு இன்னும் எட்டப்படவில்லை.
தேமுதிகவைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் வெறும் வெற்றி-தோல்விக்கானது மட்டுமல்ல, கட்சியின் அங்கீகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வாழ்வா சாவா போராட்டமாகும். கடந்த தேர்தல்களில் வாக்கு வங்கி சரிந்திருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் இன்னும் நீடிக்கிறது. அதனைத் தக்கவைக்க குறைந்தது 6 சதவீத வாக்குகளைப் பெற வேண்டிய கட்டாயம் பிரேமலதாவிற்கு உள்ளது. எனவே, தனித்துப் போட்டியிடுவதைத் தவிர்த்து, வலுவான வாக்கு வங்கியுள்ள பெரிய கட்சியுடன் கைகோர்ப்பதே புத்திசாலித்தனம் என்ற முடிவில் உள்ள பிரேமலதா விஜயகாந்த், தை பிறந்ததும் தனது இறுதி முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
