விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முடிவைத் திரும்பப் பெற்று, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி இளையபெருமாளை விசிக வேட்பாளராக அறிவித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கட்சியின் வாக்கு வங்கியைப் பாதுகாக்கவும் மாநில அரசியலில் கவனம் செலுத்தவும் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் தானே போட்டியிடுவதாக அவர் அறிவித்திருந்தார். எம்பியாக இருந்தும் அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட எடுத்த முடிவு திமுக தலைமைக்கும் விசிக தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை அளித்த நிலையில், தற்போது அவர் போட்டியில் இருந்து பின்வாங்கியிருப்பது விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
இந்த திடீர் மாற்றத்திற்குப் பின்னால் திமுக மேலிடத்தின் அழுத்தம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருமாவளவன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சபரீசனின் ‘பென்’ நிறுவனம் அளித்த தகவல்களின் அடிப்படையில், முதல்வர் ஸ்டாலின் திருமாவளவனிடம் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடியதாகத் தெரிகிறது. அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே, திருமாவளவன் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெறும் முடிவை எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
காட்டுமன்னார் கோயில் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோதிமணி இளையபெருமாள், தான் ஒரு காங்கிரஸ் காரர் என்பதைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். காங்கிரஸில் சீட் கிடைக்காத நிலையில், அவருக்கு விசிக சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் தரப்பில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், விசிக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. சொந்தக் கட்சியில் தகுதியான நிர்வாகிகள் இருக்கும்போது, மாற்றுக்கட்சியைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தியிருப்பது கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரனை காங்கிரஸில் இணைத்து சீட் வழங்கியதில் திமுகவின் தலையீடு இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது விசிகவிலும் அதே போன்ற ஒரு சூழல் அரங்கேறியுள்ளது. திமுகவின் ‘மைக்ரோ மேனேஜ்மென்ட்’ காரணமாகவே திருமாவளவன் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த நகர்வு வரும் தேர்தலில் விசிகவின் வெற்றியைப் பாதிக்குமா அல்லது கூட்டணியின் ஒற்றுமையை வலுப்படுத்துமா என்பது தேர்தல் முடிவுகளிலேயே தெரியவரும்.
