திருமாவளவன் போட்ட செக்… யூ-டர்ன் எடுத்த திமுக… விஜய் பக்கம் சாயும் ராமதாஸ்..? தமிழக அரசியலில் உருவாகும் புதிய கூட்டணி..!!

By Soundarya on மாசி 10, 2026

Spread the love

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை திமுக கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த முயற்சி கைவிடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ராமதாஸ் முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆட்சியைப் பாராட்டியது இக்கூட்டணி குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், பாமகவின் வருகையை திமுகவின் நீண்டகாலத் தோழமைக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) கடுமையாக எதிர்த்ததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

விசிக தலைவர் திருமாவளவன், பாமக மற்றும் பாஜக போன்ற “சமூகத்தைப் பிளவுபடுத்தும்” கட்சிகளுடன் ஒரே கூட்டணியில் தங்களால் பயணிக்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் பாமக இணைந்தால், தாங்கள் அக்கூட்டணியிலிருந்து உடனடியாக வெளியேறுவோம் என்று அவர் எச்சரித்தார். சாதிய அரசியலை முன்னெடுக்கும் பாமகவுடன் சமரசத்திற்கு இடமில்லை என்பதில் விசிக உறுதியாக நின்றதால், கூட்டணியின் ஒற்றுமையைக் கருதி திமுக தலைமை பாமக-வைச் சேர்க்கும் முடிவிலிருந்து பின்வாங்கியதாகத் தெரிகிறது.
இந்தச் சூழலில், ராமதாஸை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்டணியில் இணைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவிலிருந்து விலகி தவெக-வின் தலைமை ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள கே.ஏ. செங்கோட்டையன், இதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ராமதாஸ் தரப்பிற்கு சுமார் 10 தொகுதிகள் வரை ஒதுக்க தவெக முன்வந்துள்ளதாகவும், இது குறித்து விரைவில் ராமதாஸை நேரில் சந்தித்து செங்கோட்டையன் ஆலோசிக்க உள்ளதாகவும் பேச்சுவார்த்தைகள் எழுந்துள்ளன.