திமுகவில் உட்கட்சி அமைப்புகளை மறுசீரமைக்கவும், புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கவும் கட்சித் தலைமை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்டசபைத் தேர்தலுக்குப் பின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பரிந்துரைகளின் அடிப்படையில், கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் பல அதிரடி மாற்றங்களைச் செய்ய மு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கட்சிப் பணிகளை மேலும் சுறுசுறுப்பாக்கும் நோக்கில் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 78-ல் இருந்து 102-ஆக உயர்த்த கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.
கட்சியில் நீண்டகாலமாக ஒரே நபர்கள் ஆதிக்கம் செலுத்தி ‘பவர் செண்டராக’ உருவெடுப்பதைத் தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட உள்ளன. இதன்படி, நகரச் செயலாளர்களுக்கு 60 வயதும், மாவட்டச் செயலாளர்களுக்கு 70 வயதும் உச்சக்கட்ட வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. அத்துடன், பதவிகளுக்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதன் மூலம், அடுத்தடுத்து பலருக்கும் கட்சிப் பொறுப்புகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாக்கப்படுகிறது.
இந்த புதிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் மூலமாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கும் புதிய பொறுப்புகள் வழங்க திமுக தலைமை ஆயத்தமாகி வருகிறது. மண்டல செயலாளர்கள் பொறுப்பை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதுடன், துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகம் வரை புதிய இரத்தம் பாய்ச்சப்பட்டு உட்கட்சி ஜனநாயகம் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழு அளித்த மறுசீரமைப்பு அறிக்கையின் அடிப்படையில், விரைவில் நடைபெறவுள்ள தலைமைச் செயற்குழு கூட்டத்தில் இவை குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இக்கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தலைமை அறிவிக்கவுள்ள இந்த முக்கிய முடிவுகளால் அண்ணா அறிவாலய வட்டாரத்தில் தற்போதே பெரும் சுறுசுறுப்பும் பரபரப்பும் தொற்றிக்கொண்டுள்ளது.
