பழனி கோயில் நில மோசடி விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான தவெக அரசுக்கு எதிராக திமுக தனது விமர்சனக் கணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன், “பழநியில் பக்தர்கள் மொட்டை போட்டு நாம் பார்த்திருப்போம்; ஆனால் தற்போதைய விஜய் ஆட்சியில் பழநிக்கே மொட்டை போடப்பட்டுள்ளது” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார். தவெக அரசு தமிழ்நாட்டு மக்களின் முகத்தில் விபூதி அடித்து ஏமாற்றி வருவதாகவும், இந்த இமாலய ஊழல் விவகாரத்தில் முதல்வர் விஜய் ஏன் இன்னும் வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நில மோசடிக்குப் பின்னால் பெரும் பினாமி பரிவர்த்தனை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ள பரந்தாமன், கொடைக்கானலில் இருந்து ஆட்களைக் கூட்டிவந்து பத்திரப்பதிவு செய்திருப்பதைச் சுட்டிக்காட்டி, இதில் அரசுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “விசாரணை தொடங்குவதற்கு முன்பே, ‘அதிகாரிகளின் அறியாமை காரணமாகப் பதிவு நடந்துவிட்டது’ என்று அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் கூறுவது, குற்றவாளிகளைக் காப்பாற்ற அவர் துணை போவதையே காட்டுகிறது” என்றார். எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றுள்ள 4 பேரில் ஒருவரைக் கூட தவெக காவல்துறை இன்னும் கைது செய்யாதது ஏன் என்றும், நிலத்தைக் கிரயம் செய்த பொருளாதார வசதியற்ற இருவருக்குப் பின்னால் இருக்கும் நிழல் மனிதர்கள் யார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அரசையும் முதல்வரையும் சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்களை இரவோடு இரவாகக் கைது செய்யும் காவல்துறை, பழநி கோயில் நில மோசடியில் தொடர்புடைய துணை சார்பதிவாளர் மற்றும் குற்றவாளிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது. பத்திரப் பதிவுத்துறை அமைச்சரும், அரசு தரப்பு வழக்கறிஞரும் முரணான கருத்துக்களைப் பேசி வருவதை சுட்டிக்காட்டிய பரந்தாமன், தவெக அரசு கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் கூறினார். இந்த விவகாரம் குறித்து தற்போது சிபிசிஐடி விசாரணை நடத்தி வரும் நிலையில், விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் திமுக நீதிமன்றத்தை நாடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
“கோட்டு சூட்டு மாட்டிக் கொண்டு, இரண்டு மாதங்களிலேயே ஊழலை ஒழித்துவிட்டதாக முதல்வர் விஜய் வீரவசனம் பேசுவது சரியல்ல; அவரின் முதுகுக்குப் பின்னாலேயே ஊழல் புரையோடிப் போய்க் கிடக்கிறது” என்று சாடிய பரந்தாமன், கடந்த ஆட்சியில் சிறிய விவகாரங்களுக்குக்கூட ‘சி.எம் சார்…’ என ஓடி வந்த விஜய், இப்போது எங்கே போனார் என்று வினவினார். இந்த சட்டவிரோத நிலப் பதிவு முதல்வர் விஜய்க்குத் தெரிந்தேதான் நடந்திருக்கிறது என்றும், அவருக்கு இதில் தொடர்பில்லை என்றால் அவரே நேரில் வந்து விளக்கம் அளிக்கட்டும் என்றும் சவால் விடுத்துள்ளார். திமுகவின் இந்தத் தாக்குதல் தவெக அரசுக்கு அரசியல் ரீதியாகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
