“ஏமாந்துடாதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா?”…. “ரூ.5,000 கரண்ட் பில் இனி ரூ.15,000″…. தவெக ஆட்சியை கிழித்து தொங்கவிட்ட திமுக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி….!

By Nanthini on ஆடி 22, 2026

Spread the love

சென்னையில் நடைபெற்ற மறைந்த திமுக நிர்வாகி கட்பீஸ் பழனியின் நினைவு தின நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் முன்னணிப் பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் செயல்பாடுகளையும், அவர்களின் வாக்குறுதிகளையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். “தமிழ்நாட்டு மக்களுக்கு அனுபவித்து பட்டால் தான் புத்தி வரும் என்பதையே நடந்து முடிந்த 2026 தேர்தல் உணர்த்துகிறது” என்று அவர் தனது உரையைத் தொடங்கினார்.

   

திமுகவின் 75 ஆண்டுகால வரலாற்றுச் சாதனைகளையும், முந்தைய ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களையும் நினைவுகூர்ந்து அவர் உரையாற்றினார். மு.க.ஸ்டாலின் நாளொன்றுக்கு 21 மணி நேரம் மக்களுக்காக உழைத்தவர் என்று சுட்டிக்காட்டிய அவர், “மீண்டும் திமுக ஆட்சி அமைந்திருந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்ந்திருக்கும் மற்றும் சிறப்பு கூப்பன் திட்டங்கள் மூலம் பொதுமக்கள் பயனடைந்திருப்பார்கள்; ஆனால் அந்த வாய்ப்பை மக்கள் தவறவிட்டுவிட்டார்கள்” என்று வருத்தம் தெரிவித்தார்.

   

தவெக அரசின் 200 யூனிட் இலவச மின்சார வாக்குறுதியைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், நடைமுறையில் அது மக்களை ஏமாற்றும் செயலாக மாறியுள்ளது என்றார். “முன்பு 5,000 ரூபாய் மின்சாரக் கட்டணம் செலுத்தியவர்கள், தற்போது 15,000 ரூபாய் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலவச மின்சாரம் குறித்த அறிவிப்புகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றும், மின் கட்டண அட்டை நடைமுறைகளிலும் எவ்விதப் தெளிவும் இல்லை என்றும் மக்கள் புலம்புகிறார்கள். இந்த ஏமாற்றங்கள் நடக்கும் எனத் தேர்தலுக்கு முன்பே எச்சரித்தேன்” என்று குறிப்பிட்டார்.

 

மேலும், தவெக அரசின் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டத்தையும் அவர் கடுமையாகச் சாடினார். ஏற்கனவே காவல்துறையில் இருந்த பணியாளர்களையும், வாகனங்களையும் பயன்படுத்தி, சீருடையின் நிறத்தையும் ஸ்டிக்கர்களையும் மட்டுமே மாற்றிப் புதிய திட்டம் போலக் காட்டுவதாகக் குற்றம் சாட்டினார். அந்தச் சீருடைக்கான செலவைக் கூடப் பெண் காவலர்களிடமிருந்தே வசூலிப்பதாகக் கூறிய அவர், கடந்த காலத்தில் “ஸ்டாலின் சார், சாரி வேண்டாம்; நீதி வேண்டும்” எனக் கேட்டவர்கள், இப்போது அதே நீதியை வழங்கத் தவறிவிட்டதாகக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.