2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையை ஒரு வலிமையான ‘பிரம்மாஸ்திரமாக’ மாற்றத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. கடந்த 2021 தேர்தலின் போது அக்கட்சி வெளியிட்ட அறிக்கை பெரிய அளவில் கவனம் ஈர்த்த நிலையில், இம்முறை அதைவிடவும் அதிரடியான மற்றும் நவீனமான ஒரு ‘பிளாக்பஸ்டர்’ அறிக்கையை வெளியிட அறிவாலயம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மும்முனைப் போட்டி நிலவும் தற்போதைய அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அறிக்கை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக நாடாளுமன்றக் குழுத் தலைவி கனிமொழி கருணாநிதி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ள இந்தக் குழு, தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள், விவசாயிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளைப் பெறுவதுடன், நவீன தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியும் மக்களின் எதிர்பார்ப்புகளை திமுக சேகரித்து வருகிறது.
சமூக நீதி, மாநில உரிமைகள் மற்றும் கல்வி ஆகியவற்றை மையமாக வைத்து இந்த அறிக்கை தயார் செய்யப்படுகிறது. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து வரும் நிலையில், திமுக தனது ‘திராவிட மாடல்’ திட்டங்களை இன்னும் பிரம்மாண்டமாக விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றுவதே இலக்கு என முழங்கும் முதல்வர் ஸ்டாலின், இந்தத் தேர்தல் அறிக்கையைத் தனது வெற்றிக்கான மிக முக்கியக் கருவியாகப் பார்க்கிறார்.
